டில்லி
தாம் 10 வருடம் உயிரைக் கொடுத்து செய்த சேவையை கேவலம் செய்வதாக பிரதமர் மோடி மீது முன்னாள் ராணுவ அதிகரி அசோக் குமார் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.
பாஜகவினர் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கூட்டங்களில் பெருமை பேசி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தனது ஆட்சியில் மட்டுமே சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்ததாக கூறி வருகிறார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் முந்தைய ஆட்சியில் நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக்குகளை பட்டியலிட்டுள்ளனர்.
முன்னாள் ராணுவத் தலைவரும் மோடிஆட்சியில் சர்ஜிகல் ஸ்டிரைக் நிகழ்த்தியவருமான டி எஸ் ஹூடா “கடந்த ஆட்சி காலத்தில் பல சர்ஜிகல் ஸ்டிரைக்குகள் நடந்துள்ளன. அதை நீங்கள் எல்லை தாண்டிய தாக்குதல் என அழைத்தாலும் சரி, சர்ஜிகல் ஸ்டிரைக் என அழைத்தாலும் சரி, அவைகளும் தாக்குதல்களே ஆகும்” என கூறினார்.
பிரதமர் மோடி இது குறித்து, “எந்த வயதினராக இருந்தாலும் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் அந்த விளையாட்டுக்களை சர்ஜிகல் ஸ்டிரைக் என நினைத்துள்ளனர்.” என கூறி உள்ளார். இது பல முன்னாள் ராணுவ அதிகாரிகளிடையே கடும் கண்டனத்தை எழுப்பி உள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரியும் ஃபௌஜி ரிப்போர்டர் பத்திரிகை ஆசிரியருமான அசோக் குமார் சிங் டிவிட்டரில் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், “நான் பத்து வருடங்கள் எனது உயிரை பணயம் வைத்து இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். ஆனால் பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி என்னும் இந்த மனிதர் என்னை வீடியோ கேம் விளையாடியதாக கேவலமாக சொல்கிறார். நான் என்ன சொல்ல?” என பதிந்துள்ளார்.