நியூயார்க்: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. சபை அறிவிப்பதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டுவந்த சீனா, தற்போது தனது முடிவை மாற்றி, ஐ.நா. அவையின் நடவடிக்கைக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த முடிவு, இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடும் செயல்பாட்டில் சரியான நோக்கமும், பாரபட்சமற்ற போக்கும், தொழில்முறையிலான செயல்பாடும், தகுந்த ஆதாரங்களும் இருக்க வேண்டுமென சீனா விரும்பியதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருத்தப்பட்ட ஆவணங்களை முற்றிலும் கவனமாக சரிபார்த்தப் பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்நாட்டு தரப்பில் கூறப்படுகிறது.

மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு, ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து அதுசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.