புதுடெல்லி: காரின் அடியில் சிக்கி 20 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட 3 வயது குழந்தை, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த கோர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது; தெரிந்தவரின் குழந்தையான 3 வயது குலாமை, அவனது வீட்டில் கொண்டுவந்துவிட காரில் அழைத்து வந்துள்ளார் ஆஸ் முகமது என்பவர். குழந்தையை வீட்டினருகே இறக்கிவிட்டவுடன், அவருக்கு மொபைல் அழைப்பு வந்துள்ளது.
ஃபோனில் பேசிக்கொண்டே குழந்தை சாலையைக் கடந்துவிட்டான் என நினைத்துக்கொண்டு, காரை பின்புறமாக எடுத்துள்ளார் முகமது. ஆனால், காரின் அடியில் சிக்கிய குழந்தை, 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளான்.
வழிப்போக்கர்கள் எச்சரிக்கவே, காரை நிறுத்தியுள்ளார் முகமது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட குழந்தை, ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் அந்தசமயத்தில் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
– மதுரை மாயாண்டி