புபனேஷ்வர்: ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில், மாவோயிஸ்ட் தாக்குதலிலிருந்து தப்பிக்க, 36 தேர்தல் அலுவலர்கள் 15 கி.மீ. காட்டுவழியே நடந்தே சென்றதையடுத்த ஒருவாரத்தில், கிட்டத்தட்ட அதே தொலைவை, 11 தேர்தல் அலுவலர்கள் நடந்தே கடந்திருக்கிறார்கள்.
இரண்டாவது சம்பவம் நடந்தது ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில். தாக்குதல் நடத்த மாவோயிட்டுகள் தயாராக இருக்கிறார்கள் என்று கிடைத்த தகவலையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரத்தையும், விவிபேட் இயந்திரத்தையும் சுமந்துகொண்டு காட்டுவழியே நடந்தே கடந்திருக்கிறார்கள்.
திடீர் தாக்குதல் நடத்துவதற்கு தோதாக, வெட்டப்பட்ட மரங்கள் ரோடுகளில் கிடத்தப்பட்டு இருந்தன. ஒரு நாள் முன்புதான், கிராம் ரோஸ்கார் சேவக் என்ற அமைப்பைச் சேர்ந்த, வாக்குப்பதிவு மேற்பார்வையாளராக பணிபுரிந்த ஒரு பெண்மணி, பரஹாலா கிராமத்தின் அருகே மாவோயிட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
எனவே, பரஹாலா கிராமத்தின் பூத் எண் 12ல் வெற்றிகரமாக வாக்குப்பதிவை முடித்தப் பின்னர், காட்டிலேயே 16 மணிநேரங்கள் மறைந்திருந்த அந்த தேர்தல் குழு, துணை ராணுவப் படையினர் வந்தவுடன், அவர்களுடைய பாதுகாப்பின்கீழ், 15 கி.மீ. தூரத்தை காட்டுவழியே நடந்தே கடந்திருக்கிறார்கள்.
– மதுரை மாயாண்டி