காரைக்குடி:
யோகிக்கு தன்மானம் இருந்தால், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல்ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், தனது பதவியை விட்டு விலகியிருக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது மகனும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஓட்டு வேட்டையாடினார்.
காரைகுடி பகுதியில் செய்தியாளரகளிடம் பேசிய ப.சிதம்பரம், ‘உ.பி. முதல்வர் யோகி, தன்னுடைய பேச்சாலும், நடவடிக்கையாலும் மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார்.
தற்போது உ.பி.யில் நடைபெறும் யோகியின் ஆட்சிக்கும், ஆங்கிலேயர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது. அதன் காரணமாகவே தேர்தல் ஆணையம் அவர் பிரசாரத்துக்கு தடை விதித்துள்ளது. முதன்முறையாக ஒரு மாநில முதல்வருக்கு இது போன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தன்மானம் உள்ளவராக இருந்தால் உடனடியாக யோகி பதவியை விட்டு விலக வேண்டும்’ என கூறினார்.
உ.பி. மாநில முதல்வர் யோகி மீரட்டில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மாயாவதி பேசியதை சுட்டிக்காட்டி, அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது’ என பேசினார். யோகியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
இதன் காரணமாக, தேர்தல் விதிகளை மீறி ஜாதி, மதம் தொடர்பாக யோகி பேசியதாக கூறி, முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. ஆனால், யோகி தரப்பில் பதில் அளிக்க மறுத்துவிட்டதால், அவர், 16ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்குதேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தடை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல மாயாவதிக்கும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.