சென்னை:

சுட்டடெரிக்கும் வெயிலை கணக்கில் கொண்டு, 2 பெண்கள் ஒரு ஆண் என்ற விகிதத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களிடம் கூறும்போது, சுட்டெரிக்கும் வெயிலில் கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இந்த 2:1 முறை உதவும்.

தமிழகத்தில் 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதால், இந்த 2:1 முறையை அமல்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதே போன்று மூத்த குடி மக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூளூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்கும் போது ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும்.

இந்த 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும்போது, நடு விரலில் மை வைக்கப்படும்.

தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி, தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிகிறது.
தமிழக மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் வாக்களிக்க ஏப்ரல் 18-ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.