நெட்டிசன்:
திருப்பூர் புத்தக விழாவில், 04-02-2019 அன்று நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதை. மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது.
அப்போதெல்லாம்
வண்டியில் பெட்ரோல் திருடினார்கள்,
இப்போது வண்டியையே திருடுகிறார்கள்!
அப்போதெல்லாம்
வங்கியில் கொள்ளை அடித்தார்கள்.
இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள்!
அப்போதெல்லாம்
குழந்தைகளிடம் நகை திருடினார்கள்
இப்போது குழந்தைகளையே திருடுகிறார்கள்!
அப்போதெல்லாம்
தொலைக்காட்சியில் படங்களும் செய்தியும் வந்ததோடு,
இடையிடையே விளம்பரங்களும் வந்தன
இப்போது விளம்பரங்களுக்காக வரும் தொடர்களில்
செய்தியும் படமும் சிறிதளவு வருகிறது!
அப்போதெல்லாம்
மீனவர் மீன் பிடித்தார்கள்
இப்போது மீனவர்களையே பிடித்துப் போகிறார்கள்!
அப்போதெல்லாம்
அம்மா அப்பா பாசத்தால் வளர்ந்தோம்
இப்போது மம்மிடாடி பணத்தால் வளர்க்கிறார்கள்!
அப்போதெல்லாம்
பிள்ளைகள் வீட்டில் பெற்றோர் இருந்தார்கள்
இப்போது வெளிநாட்டில் பிள்ளைகள்
தொடர்பு எல்லக்கு அப்பால் இருக்கிறார்கள்!
அப்போதெல்லாம்
தண்ணியடித்தவர்கள் பயந்தொதுங்கிப் போனார்கள்
இப்போது தண்ணியடிக்காதவரே ஒதுங்கிப் போகிறார்கள்!
அப்போதெல்லாம்
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார்கள்,
இப்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள்!
வங்கியில் சிறுகடன் வாங்கிய விவசாயி விஷம் குடிக்கிறான்
வங்கியை முழுங்கியவனோ வெளிநாட்டில் விஸ்கி குடிக்கிறான்!
கடவுள் இல்லை கடவுள் இல்லை
பெரியார் சொன்னது உண்மைதான்!
ஏழாயிரம் கோவில்களில் கடவுள் இல்லை!
பூசை வைத்த பூசாரிகள் சொல்லவில்லை
மீசை வைத்த அதிகாரிதான் கண்டு சொன்னார்!
போலிச்சிலைகளைப் பூசித்த மக்கள் இப்போது
யோசிக்கிறார்கள்., கடவுள் இல்லை?
போலிப்பூசாரி, போலிச் சிலை, போலிக் கடவுள், போலி மருத்துவர்
போலி அதிகாரி, போலிப் போலிசு, போலித்தலைவர்கள்,
போலி அமைச்சர், போலி அரசு, போலி மகாத்மா!
கொல்லப் பட்டவரை மகாத்மா என்றனர் பலர்
கொன்றவனையும் மகாத்மா என்பவரும் உளர்!
முன்பை விட இப்போது
இந்தியா இப்போது முன்னேறித்தான் விட்டது!!
அப்போதெல்லாம்
வாக்காளரை விலைக்கு வாங்கினார்கள்,
இப்போது வேட்பாளர்களையே வாங்கிவிடுகிறார்கள்
அப்போதெல்லாம்
கட்சியில் செல்வாக்கைக் காட்டி சீட்டுக் கேட்டார்கள்
இப்போது செலவு செய்யும் தகுதி அறிந்தே சீட்டுத் தருகிறார்கள்
அப்போதெல்லாம்
தலைவர்களை விலைக்கு வாங்கினார்கள்
இப்போது கட்சிகளையே வாங்கிவிடுகிறார்கள்
அப்போதெல்லாம்
அமரர் ஊர்தி பிணத்தோடு போனது,
இப்போது பணத்தோடு போகிறது!
அப்போதெல்லாம்
உணவே மருந்தாக இருந்தது,
இப்போது உணவும், மருந்தும்கூட நஞ்சாகிவிட்டது!
அப்போதெல்லாம்
வெளியூருக்கு படிக்க அனுப்பவே யோசித்தார்கள்,
இப்போது தேர்வெழுதவும் வெளிமாநிலம் அனுப்புகிறார்கள்
அப்போதெல்லாம்
முற்றும் துறந்தவர்களையே முனிவர்கள் என்றார்கள்
இப்போது, காவிஉடைகளில் கார்ப்பரேட் வணிகர்கள்!
அப்போதெல்லாம்
படிப்பதற்கு இலவசப் பள்ளிக்கூடம் திறந்தார்கள்
இப்போது, கொள்ளைக்கூடங்கள் திறக்கப்படுகின்றன
அப்போதெல்லாம்
பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்வோம் என்றான் பாரதி
இப்போது உண்டியலைப் பெரிதாக்கி சிலையைத் திருடிவிட்டார்கள்!
அப்போதெல்லாம்
நீதிபதியிடம் நீதிமன்றம் போய் நீதி கேட்டோம்
இப்போது நீதிபதிகளே வீதிக்கு வந்து நீதி கேட்கிறார்கள்
அப்போதெல்லாம்
குற்றவாளிகளுக்கு தண்டனை தந்தார்கள்
இப்போது பதவி உயர்வு தந்து பாராட்டுகிறார்கள்!
அப்போதெல்லாம்
ஆடம்பரப் பொருள்களுக்கே அதிக வரி போட்டார்கள்
இப்போது அவசியப் பொருள்களுக்கே அதிக வரி போடுகிறார்கள்
அப்போதெல்லாம்
கோமாளிகள் சர்க்கஸில்தான் இருந்தார்கள்,
இப்போது சர்க்காரிலேயே இருக்கிறார்கள்
அப்போதெல்லாம்
தலைவர்கள் புயல்சேத ஆறுதலுக்கு வந்தார்கள்
இப்போது தேர்தலுக்கு மட்டுமே வருகிறார்கள்
கவிஞர் நா.முத்துநிலவன்.
வலைப்பக்க இணைப்புக்குச் சொடுக்குக –
http://valarumkavithai.blogspot.com/2019/04/blog-post_6.html