டில்லி
மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய விதிகளை தளர்த்தியதாக தி இந்து செய்தி ஊடகம் தகவல் அளித்துள்ளது.
விமானப்படைகளுக்காக விமானம் உள்ளிட்ட தளவாடங்கள் கொள்முதலில் இரு முக்கியமான அடிப்படை விதிகள் உள்ளன. முறையற்ற பண பரிமாற்றத்தை தடுக்க இந்த இரு விதிகளும் முக்கியமானதாக ஆக்கப்பட்டுள்ளன. அனைத்து வெளிநாட்டு கொள்முதல் ஒப்பந்தங்களிலும் இந்த இரு விதிகளும் தொடர்ந்து கடைபிடிக்கப் பட்டு வருகின்றன.
இந்த விதிகள் என்னவென்பதை பார்ப்போம்.
இந்த விதிகளில் முதல் விதி வெளிநாட்டு நிறுவனத்துடன் வர்த்தகம் செய்யும் போது பேச்சு வார்த்தைகள் யாருடன் நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்து ஒரு குழு அமைக்க வேண்டும். இவர்களை தவிர வேறு யாரும் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது.
மற்றொரு விதி ஒப்பந்தம் தொடர்பான கணக்குகளை பார்க்க எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதாகும்.
பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் விமானம் கொள்முதலுக்காக செய்த ஒப்பந்தத்தில் இந்த இரு விதிகளுமே மீறப்பட்டுள்ளன.
முதல் விதிப்படி இந்திய ராணுவக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடந்த போதே அதற்கு இணையாக பிரதமர் அலுவலகமும் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. இது முதல் விதி மீறல் ஆகும்.
இரண்டாவதாக ஒப்பந்ததாரரான டசால்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்த கணக்குகளை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. . இந்த விதி மீறலால் பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஆதாயம் அடைந்துள்ளது.
இந்திய ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விதிகளின்படி அமைக்கப்பட்ட இந்த இரு முக்கிய விதிகளுமே மீறப்பட்டுள்ளது
அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான மறைந்த மனோகர் பாரிக்கர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் குழுவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகவே அவர்கள் ஓரம்கட்டப்பட்டு பிரதமர் அலுவலக அதிகாரிகளால் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
மேலே குறிப்பிட்ட இந்த செய்தி தி இந்து ஆங்கில ஊடகத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரஃபேல் விவகாரத்தில் கடும் ஊழல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும்நிலையில் இந்த தகவலும் வெளியானது மத்திய அரசுக்கும் கடும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.