லப்புரம், கேரளா

குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சிறுமியை தாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் ஒரு ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 11 வயது சிறுமி தனது சித்தியுடன் வசித்து வருகிறார்.   சிறுமியின்  பெற்றோர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளனர்.   மிகவும் ஏழையான அந்த சிறுமி ரோட்டில் இருக்கும் குப்பைகளை பொறுக்கி விற்று பிழைப்பை நடத்தி வருகிறார்.

 

சிறுமியை தாக்கிய ராகவன்

மலப்புரத்தில் உள்ள எடப்பால் பகுதியில் வசிக்கும் ராகவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி தலைவர் ஆவார்.  அத்துடன் வட்டம்குளம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.   இந்த  பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே அந்த ஆந்திர சிறுமியும் மற்றொரு சிறுமியும் ஆளுக்கு ஒரு சாக்குப்பையை வைத்துக் கொண்டு குப்பைகளை பொறுக்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் தலைவர் ராகவன் ஆந்திர சிறுமியை திருடி விட்டதாக குற்றம் சாட்டி சரமாரியாக அடித்து தாக்கி உள்ளார்.   அந்தப் பெண்ணிடம் இருந்த சாக்குப்பையை பிடுங்கிய ராகவன் அந்த பையால் சிறுமியை தாக்கி உள்ளார். அந்த சாக்கினுள் இருந்த ஒரு இரும்பு கம்பியால் அந்த சிறுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

உடன் இருந்த சிறுமியின் தகவலின் பேரில் அங்கு வந்த சங்கரன்குளம் காவல்நிலைய காவலர்கள் ராகவனை கைது செய்துள்ளனர்.   அவர் மீது தவறாக தண்டனை அளித்தல்,  பயங்கரமான ஆயுதத்தால் தாக்குதல் நடத்துதல்,   காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

விவரம் அறிந்து அங்கு வந்த குழந்தைகள் உதவி அதிகாரிகள் உடனடியாக அந்த சிறுமியை மலப்புரம் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அந்த சிறுமி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.   அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது.

இந்த தகவலின் அடிப்படியில் கேரள மாநில மனித உரிமை ஆணையம் ஒரு சுவொ மோட்டோ வழக்கை பதிந்துள்ளது.    மலப்புரம் காவல்துறை அதிகாரியிடம் இந்த நிகழ்வு குறித்த விரிவான அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   அத்துடன் மாநிலத்தில் நடைபெறும் குழந்தைகள் மீதான தாக்குதலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில ஆட்சியரை கேட்டுக் கொண்டுள்ளது.