லக்னோ: யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் விதிமுறையை மீறிய பேச்சையும், அதற்காக அவரை தேர்தல் கமிஷன் சாதாரணமாக எச்சரித்து விட்டிருப்பதையும், கடுமையாக கண்டித்துள்ளார் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான்.
“இது என்னவகை நீதி?” என்று அவர் கேட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய ராணுவத்தை, மோடியின் சேனை எனக் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், “இனிமேல் இப்படி பேசக்கூடாது. எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்” என்ற அளவில் அறிவுறுத்திவிட்டு பிரச்சினையை முடித்துவிட்டது தேர்தல் ஆணையம்.
இந்த விஷயத்தில்தான் நியாயம் கேட்டுள்ளார் ஆஸம்கான்.
“நமது நாட்டின் எல்லையைக் காக்க, எங்களின் கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்துவோம் என நான் கூறியபோது, என்னிடத்தில் கடுமையாக நடந்துகொண்ட தேர்தல் ஆணையம், யோகி விஷயத்தில் மட்டும் இப்படி நடந்துகொள்ளலாமா? இது என்னவகை நீதி?” என்றுள்ளார்.
– மதுரை மாயாண்டி