சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக, தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஈரோடு தொகுதியில் மதிமுகவின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக, அதிமுக கட்சிகளின் தலைவர்கள்  நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டு இன்று பிரசாரத்திற்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள  மதிமுக கட்சியின் தலைமையகமான தாயகத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.

அப்போது, இந்த ஆண்டு மாற்றங்களின் ஆண்டாக இருக்கும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி செயல்திட்டம் என்ற பெயரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பது தடுக்கப்படும்  உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 1500 ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாக்கு கிடைக்கும் என அதிமுக அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் பணம் வாங்கி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதாகவும் கூறினார்.