சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் தொலைக்காட்சி தொடர்களால் கள்ள உறவுகள் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளது.
திருமண பந்தத்தை மீறி ஆண் பெண் இடையே உறவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பழமை வாதிகள் மட்டுமின்றி புதுமை விரும்பிகளும் இத்தகைய உறவுகளால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். பழமை வாதிகள் இதனால் கலாசாரக்கேடு நடைபெறுவதாக கூறும் வேளையில் புதுமை விரும்பிகள் பலர் இந்த உறவுகளால் மன நோயாளிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விவாதத்தின் போது சென்னை உயர்நீதிமன்றம் மண உறவுக்கு மீறி கள்ள உறவுகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, “சமீப காலங்களாக கள்ள தொடர்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஆட்கடத்தல், கொலை, தாக்குதல் போன்றவைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன. ஆகவே நீதிமன்றம் இந்த கள்ள உறவுகள் அதிகரிப்புக்கான உண்மையான காரணங்களை தெரிந்துக் கொள்ள விரும்புகிறது.
இத்தகைய கள்ள உறவுகள் அதிகரிப்புக்கு தொலைக்காட்சி தொடர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என நீதிமன்றம் கருதுகிறது. இதை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆய்வு செய்து தெளிவான முடிவை நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும்.
இதை தவிர பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பாலியல் இயலாமை, சமூக வலைதள தாக்கம், மேற்கத்திய மயமாகுதல், குடும்பத்தினருடன் நேரம் செலவிழிக்காமை உள்ளிட்ட பல காரணங்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டுமென இந்த நீதிமன்றம் யோசனை தெரிவிக்கிறது. அந்தக் குழுவின் ஆய்வில் மேலே குறிப்பிடபட்டவைகளுடன் மணமக்கள் விருப்பமின்றி நடத்தப்படும் திருமணங்களும் உட்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளது.