சூரத்: தமது தேசப்பற்றை வெளிப்படுத்த, சூரத் வியாபாரிகள் மேற்கொண்ட முயற்சியில் ஏற்பட்ட ஒரு சிறு தவறு, பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பாகிஸ்தானுடன் சமீபத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மற்றும் மோதல்களையடுத்து, நாடெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பலரும் தமது தேசப்பற்றை பலவிதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், சூரத் ஜவுளி வியாபாரிகளும் தங்களின் பங்கிற்கு எதையேனும் செய்ய நினைத்தனர்.

பெண்களுக்கான சேலையில், இந்திய ராணுவத்தினரின் படத்தை அச்சிட்டு தயாரிக்க முடிவு செய்தனர். ஆனால், அப்படி ஒரு வியாபாரி மேற்கொண்ட முயற்சியில் சுவாரஸ்யமான தவறு ஒன்று நிகழ்ந்துவிட்டது. அதாவது, அவர் உற்பத்தி செய்த சேலையில், இந்திய ராணுவத்தின் படம் இருப்பதற்கு பதிலாக, அமெரிக்க ராணுவத்தின் படம் இடம்பெற்று, பலரையும் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.

கூகுள் தேடலில் சென்று, வெறுமனே Army என்று டைப் செய்தால், அமெரிக்க ராணுவத்தின் படம்தான் முதலில் வருகிறது. எனவே, அதனடிப்படையில் இந்த தவறு நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த தவறு, டிவிட்டரில் அதிகம் பரவிவிட்டது.

அதேசமயம், இந்திய ராணுவத்தின் படத்தை அச்சிட்டு, மற்றொரு வியாபாரி தனது உற்பத்தி சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி