பாட்னா:
பீகாரில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி கனவில் மிதக்கிறது என்று பாஜக அதிருப்தி தலைவரான சத்ருகன் சின்ஹா தெரிவித்து உள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா, பாஜக தலைமைக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது.
இந்த நிலையில், பீகாரில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசி வரு கிறார். விரைவில் சமாஜ்வாதி கட்சியில் சேருவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய சத்ருகன் சின்ஹா, பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என்று பாஜக, நிதிஷ்குமார் கூட்டணி கனவு கண்டு வருகிறது. ஆனால், அது நடைபெறாது என்றவர் தான் மக்களவைத் தேர்தலில், பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தொகுதியில், ஆர்.ஜே.டி, காங்கிரஸ், ஆர்.எல்.எஸ்பி மற்றும் ஹாம் ஆகியோரைக் கொண்ட கூட்டணி வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டிய சின்கா, ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜாஷ்வி யாதவ் ஆகியோருடன் சந்தித்தார். பிஜேபி டிக்கெட் மறுக்கப்படும்போது, காங்கிரஸ் அல்லது ஆர்.ஜே.டி. வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவரது சந்திப்புக்கள் நடைபெற்று வருவதாக கூறப்டுகிறது.
முன்னதாக சத்ருகன்சின்ஹா, ராஞ்சி சிறைச்சாலையில் லாலு பிரசாத்தையும் சந்தித்து பேசினார். அதுகுறித்து கூறிய சின்ஹா, லாலு ஒரு அன்பான குடும்ப நண்பர், லாலு பிரசாத் யாதவை மீண்டும் ஒரு முறை சந்தித்த மகிழ்ச்சி அவரது கடினமான சூழ்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும், அவர் சற்று உற்சாகமாகவும், சோர்வாகவும், இருந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்… என்று கூறி உள்ளார்.