புதுடெல்லி:
தேசப்பற்றை நாம் பிரதமர் மோடியிடம் இருந்து கற்கக் கூடாது என மூத்த காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப் படையினர் அழித்தனர். இதனால் இந்திய-பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானும் விமானத் தாக்குதல் நடத்த முயற்சித்தது.
அந்த முயற்சியை நம் விமானப் படையினர் முறியடித்தனர். அப்போதுதான் விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக தப்பித்த அவர், பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் விடுதலை செய்தது.
இதனை நாடே கொண்டாடி வருகிறது. எனினும், இது மோடிக்கு கிடைத்த வெற்றியாக பாஜ தலைவர் அமீத்ஷாவும், பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எதிர்கட்சிகளுக்கு தேசப்பற்றே இல்லை என்று மோடி கூறிவருகிறார்.
இந்நிலையில், ஏஎன்ஐ தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அளித்த பேட்டியில், பாதுகாப்புப் படையினரை யாரும் கேள்வி கேட்க முடியாது. மோடி மட்டுமே அவர்களை கேள்வி கேட்க முடியும். பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் ஆதாயம் தேடுகிறார் மோடி. நம் ராணுவத்தை ஆதரிப்போம். தேசப்பற்றை மோடியிடமிருந்து கற்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.