தஞ்சாவூர்
ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் சென்றபடி டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.
தற்போது பிரபலமாகி வரும் விடியோ செயலியான டிக்டாக் செயலியில் பலர் தங்கள் திறமைகளை காட்டும் வீடியோக்களை பதிவிடுகின்றனர். இந்த செயலிக்கு தற்போது பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த செயலியில் பல பெண்கள் ஆபாசமாக நடனமாடுவதை பலரும் பகிர்வதாக புகார் எழுந்தன. தமிழக அரசு இந்த செயலியை தடை செய்ய ஆலோசித்து வருகிறது.
ஆனால் இதில் ஆபாசம் மட்டுமின்றி அபாயமும் உள்ளதை தற்போதைய நிகழ்வு உறுதி செய்துள்ளது. தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் சூரியா, ரீகன், விக்னேஷ் ஆகியோர் சாலையில் சூரியாவின் ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது ஸ்கூட்டரை ஓட்டிய சூர்யா வேகமாக வளைந்து வளைந்து ஓட்டி உள்ளார். அது அந்த சாலையில் சென்றவர்க்ளை அச்சுறுத்தி உள்ளது.
இதை டிக்டாக்கில் வெளியிட மற்ற இருவரும் வீடியோ எடுத்துள்ளனர். வாகனம் தாறுமாறாக சென்றதால் அங்கு சென்ற கொண்டிருந்த ஒரு மினி பஸ்சில் ஸ்கூட்டர் மோதி மூவரும் காயமடைந்துளனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட மூவரில் சூரியா மரணமடைந்துள்ளார்.
அதற்குள் மற்ற மாணவர்கள் சூரியாவின் சாகச வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவைக் கண்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவல்துறையினர் விபத்து குறித்தும் வீடியோ குறித்தும் விசாரணை நடத்த மருத்துவ மனைக்கு சென்றுள்ளனர். ஆனால் ரீகன் மற்றும் விக்னேஷ் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர். தஞ்சாவூர் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.