புல்வாமா பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமதி என்ற தீவராத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டிய இந்தியா கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டது.
இத்தகைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடி, பொருளாதார ரீதியாகவும், ராணுவ நடவடிக்கையின் மூலமும் பாகிஸ்தானிற்கு நெருக்கடி கொடுக்க உத்தரவுப் பிறப்பித்தார். இதனை தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த தூண்டுகோலாக இருந்த பாகிஸ்தானுக்கு ஐ.நா.வின் பாதுகாப்பு படை அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டது.
அதுமட்டுமின்றி, தீவிரவாதிகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் அரசிற்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்தது. இருப்பினும், இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஏற்கெனவே பொருளாதார நிலையில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் இந்த தீவிரவாத தாக்குதல் மூலம் உலக நாடுகளின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு காரணமாக இருந்த தீவிரவாத அமைப்பை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது புலாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியுள்ளது. லாகூரில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹவல்பூர் என்னுமிடத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பஞ்சாப் மாகாண அரசு கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.