சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜ, பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், புதியதமிழகம், புதிய நீதிக்கட்சி யுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்து உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதில் மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் விறுவிறுப்பு காட்டி வருகின்றன.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பாஜக, அதிமுக பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
மேலும், தேமுதிகவை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இத்துடன், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் மற்றும் ஏ.சி.சண்முகத்தில் புதிய நீதிக்கட்சி போன்ற சிறு சிறு கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவர்களை இரட்டை இல்லை சின்னத்தில் களத்தில் இறக்க அதிமுக முடிவு செய்துள்ளது என்றும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறி உள்ளார்.