சென்னை:

பாராளுமன்ற தேர்தலில், டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்று  தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் அறிவித்து உள்ளது.  திமுக, அதிமுக போன்ற எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்து விறுவிறுப்பாகவும், மும்முரமாகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். திமுக ஒருபுறமும், அதிமுக ஒருபுறமும் கூட்டணி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ஜாதி சங்கங்களை அணுகி ஆதரவுகள் கோரி வருகின்றன.

இந்த நிலையில் அதிமுக பாமக கூட்டணி மற்றும், அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில், இன்று திமுக காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில், எந்தெந்த கட்சி கூட்டணி யில் எந்தெந்த அரசியல் கட்சிகள், ஜாதிய அமைப்புகள் இடம்பெறு கிறது என்பது தெரிய வரும்.

இந்த நிலையில், டாஸ்மாக் மதுக்குடிப்போர் சங்கம் தாங்கள் திமுக அதிமுக உள்பட எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன் விடுத்துள்ள அறிவிப்பில்,

வரும் நாடாளுமன்ற தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணியில் சேரும் எந்த கட்சியுடனும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது, ஆதரிக்காது. 61.4% டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும். இல்லையேல் தனித்து தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.