புதுச்சேரி:
கவர்னருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிற ரீதியாக விமர்சனம் செய்த கிரண்பேடிக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நெட்டிசன்களும் கடும் தெரிவித்து வருகின்றனர்.
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி கடந்த 13ந்தேதி முதல், கவர்னர் மாளிகை வாயிலில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாராயணசாமியின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் திறந்த மன்றத்தில் அனைத்து விவகாரங்களை யும் பேசி முடிவு செய்யலாம். நாள், நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று முதல்வர், அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சவால் விடுத்தார். இந்த சவாலை எற்றுக் கொள்வதாக நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிற ரீதியாக கிரண்பேடி விமர்சித்து டிவிட் போட்டுள்ளார். அதில், ”ஊடகத்திலிருந்து ஒருவர் என்னிடம் தர்ணாவா?யோகாவா? என்ற ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்டார்… அதற்கு நான், ஆமாம்… அது நீங்கள் அமர்ந்திருக்கும் நோக்கத்தைச் சார்ந்தது.
எந்தவிதமான ஆசனாவில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், எந்தவிதமான சத்தத்தை எழுப்பினீர் கள் என்பதைப் பொறுத்தது” என்று கூறி இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கும் படத்தைப் பதிவிட்டு இருந்தார்.
நாராயணசாமி கறுப்பாக இருப்பதால், அவரது நிறத்தை குறிப்பிட்டு, கிரண்பேடி காகத்தின் படத்தையும் பதிவிட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வரை நிறத்தைக்கொண்டு விமர்சிப்பதாக என கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் கிரண்பேடியின் பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. கிரண்பேடியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.