’’கேட்டது -10..கிடைத்தது-6’’ அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.உடன்பாடு
‘’தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’என்று துணை முதல்வர் ஒ.பி.எஸ்.,சிதம்பர ரகசியத்தை அவிழ்ப்பது போல் சொல்லி இருந்தாலும்-
அ.தி.மு.க.-பா.ஜ.க.இடையே டெல்லியில் பேச்சு வார்த்தை நடப்பதை ஊடகங்கள் சில வாரங்களாகவே வெளிச்சம் போட்டு காட்டி வந்தன.
சென்னையில் நேற்று பேச்சு வார்த்தை ரகசியம் பகிரங்கமாக வெளிப்பட்டது.
தமிழக பா.ஜ.க.பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் –உடன்பாட்டை இறுதி செய்திட நேற்று இரவு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கினார். நிருபர்களிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டுக்கு சென்றார்.
அங்கு மாநில அமைச்சர்கள் பி.தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் வந்தனர். ஏலம் போடுவது போல் பேச்சு தொடங்கியது.
‘’10 தொகுதிகள்’’ என்று ஆரம்பித்தார், கோயல்.
‘’ம்..ஹூம்.. 4 இடங்கள் மட்டுமே’’ என்று இரண்டு மணிகளும் செல்லமாக பிடிவாதம் காட்டினார்கள்.
கடைசியாக பா.ஜ.க.வுக்கு 6 தொகுதிகள் என்று மணி அடித்து ஏலம் சுமுகமாய் முடிந்தது.
தொகுதிகளும் கிட்டத்தட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாசுடன்,அ.தி.மு.க.துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேச்சு நடத்தி வருகிறார். வட மாவட்ட வன்னியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க முனுசாமி,கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் அன்புமணியை எதிர்த்து போட்டியிட்டு 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டவர்.
உடன்பாடு உறுதி.தொகுதிகளில் தான் இழுபறி.
அமெரிக்காவில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நாளை தாயகம் திரும்புகிறார்.
அதன் பின், அவருடன் அ.தி.மு.க.பேச்சு நடத்தி உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும்.
டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர்,ஏ.சி.சண்முகம்,தே வநாதன் யாதவ் ஆகியோரை பா.ஜ.க.கவனித்து கொள்ளும்.
—-பாப்பாங்குளம் பாரதி