சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மாதம் நடத்திய போராட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள்மீதாd நடவடிக்கையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கம் கடந்த சில ஆண்டு களாக போராடி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 22ந்தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது, மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு சுமார் 1111 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு நீதிமன்றங்களும் ஆதரவு அளிக்காத நிலையில், அரசின் கடுமையான எச்சரிக்கை காரணமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை என்றும், மேலும், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், போராட்டம் காரணமாக ஆசியர்களின் ஒரு வாரம் சம்பளம் பிடிக்கப்பட்ட நிலையில், பல ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.