வைசாலி:
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 11பெட்டிகள் தடம்புரண்டதில் 7பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மீட்பு சீரமைப்புப் பணிகளில் ரயில்வே துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட உள்ளது.
பீகார் மாநிலம் ஜோக்பானியில் இருந்து தலைநகர் டில்லி செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. நேற்று இரவு 8 மணிக்குப் புறப்பட்டஇந்த ரயில் இன்று அதிகாலை 3:58மணிக்கு வைசாலி மாவட்டத்தின் சகதாய் புசுர்க் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெட்டிகள் கவிழ்ந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பயணிகளை காப்பாற்றினர். . இந்த விபத்தில் 7பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகளை மீட்டு மாவட்டத் தலைமை மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரயில்வே துறை சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,கடுமையாகக் காயமடைந்தோருக்கு 1 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தோருக்கு 50ஆயிரம் ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோரின் மருத்துவச் செலவு முழுவதையும் ரயில்வே துறை ஏற்றுக்கொள்ளும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பீகார் அரசு சார்பில் 4லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
ரயில் தடம்புரண்ட வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தடம்புரண்ட 11பெட்டிகள் தவிர மற்ற 12பெட்டிகளை ஹாஜிப்பூருக்குக் கொண்டுசென்று கூடுதல் பெட்டிகளை இணைத்து டெல்லிக்கு இயக்கப்படும் என ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளா.