டில்லி
கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் வரலாறு கானாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேசிய புள்ளி விவர ஆணையம் மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு அரசு அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும் நாட்டின் பல இனங்களில் உள்ள புள்ளி விவரங்களை சேகரித்து அதை அரசுக்கு அறிக்கையாக இந்த அமைப்பு வழங்கி வருகிறது. நாடெங்கும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்த தகவல்களை ஆணையம் அளிக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
ஏற்கனவே நாடெங்கும் உள்ள வேலை இல்லா திண்டாட்டம் குறித்த புள்ளி விவரங்களை அரசுக்கு இந்த வருட தொடக்கத்தில் ஆணையம் அளித்ததாகவும் அதை அரசு வெளியிடாமல் உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் பற்றியும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
”கடந்த 2017-18 ஆம் ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை 6.1% அதிகரித்துள்ளது. இது கடந்த 45 வருடங்களில் மிகவும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்த வருடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் இந்த காலகட்டத்தில் பணி இழந்துள்ளனர்.
வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 23 – 25% வரை உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் 7.8% மக்களும் கிராமப்புறங்களில் 5.3% மக்களும் வேலை இழந்துள்ளனர்.
அது மட்டுமின்றி கடந்த 2011-12 ஆம் வருடத்தை விட 2017-18 ஆம் வருடம் உடல் உழைப்பை அளிக்க முன் வருவோர் எண்ணிக்கை 36.9% அதிகரித்துள்ளது.
இதன் மூலம் உடல் உழைப்பை அளிக்க முன் வராதோருக்கு வேலை கிடைப்பதில்லை என்பது புலனாகி உள்ளது.” என அந்த அறிக்கையில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.