புதுடெல்லி:

வரும் 2020-ம் ஆண்டுக்குப் பின், நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சிலிடம் (நாக்) அங்கீகாரம் பெற வேண்டும்.


இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் (யூசிஜி) பூஷன் பட்வர்தன் கூறியதாவது:

உயர் கல்வி குறித்த அகில இந்திய ஆய்வின்படி, நாடு முழுவதும் 799 பல்கலைக்கழகங்களும், 39 ஆயிரத்து 701 கல்லூரிகளும், 11,923 தன்னாட்சி கல்லூரிகளும் உள்ளன.

2018-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வரை, 568 பல்கலைக் கழகங்களுக்கும் 11,816 கல்லூரிகளுக்கும் ‘நாக்’அங்கீகாரம் அளித்துள்ளது. இதில் 1,856 கல்வி நிறுவனங்களுக்கு ‘ஏ’ கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, 231 பல்கலைக் கழகங்களும், 27,885 கல்லூரிகளும் அங்கீகாரம் பெறவில்லை.
பரமார்ஸ் திட்டத்தின்படி, ‘நாக்’ அங்கீகாரம் பெறும் வகையில் பல்கலைக் கழகங்களையும், கல்லூரிகளைகளையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் இருந்து கல்வியாளர்களை நியமிப்போம். அவர்கள் பகுதியில் செயல்படும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களின் பட்டியலை தருவார்கள்.

1986-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சில் (நாக்) கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தரமான கல்வியை வழங்கவேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வி நிறுவனங்களின் கற்பிக்கும் முறை, ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து ‘நாக்’ அளவீடு செய்து வருகிறது.

விதிமுறைகளின்படி, உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கி 6 ஆண்டுகள் ஆகியிருந்தால், ‘ நாக்’ அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க தகுதியாகக் கருதப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.