கொல்கத்தா:
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க நாடே ஓரணியில் திரண்டுள்ளதாக, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சனிக்கிழமை எதிர்கட்சிகளின் மெகா பேரணியை நடத்தினார். இதில் பல்வோறு மாநிலங்களில் இருந்து எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்பதற்காக கொல்கத்தா வந்த மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறும்போது, “மம்தா சிறந்த தலைவர். அவரைப் போன்று கடினமாக உழைக்கும் தலைவர்கள் தான் அரசியலுக்கு தேவை. மதசார்பற்ற அரசை அமைக்க அவர் உருவாக்கும் பாதை வரலாற்றுச் சிறப்புமிக்கது. மத்தியில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க நாடே ஓரணியில் திரண்டுள்ளது” என்றார்.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை , முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்று திரட்ட மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொள்வதாக பாராட்டினார்.