இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
இன்றைய நாள் பழையனவற்றையும் உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகி விட்டது.
அன்றைய தினம் வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.
இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
போகி பண்டைய காலத்தில் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. இது இந்திரனுக்காக கொண்டாடப்படும் பண்டிகை. இந்திரனைப் போல நாமும் மகிழ்ச்சியுடன் தினசரியும் போகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
போகி உண்டாகும் காற்று மாசுவை தடுக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடுவோம்.