டில்லி:

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் கூறுகின்றன.

நாட்டில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான வரம்பு 50% மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் கொடுக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பு  வழங்கி உள்ளது.

ஆனால், தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பபட்டு வருகிறது.

ஆனால், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கும் மேல் செல்லக்கூடாது என்று அரசியல மைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது  உச்சநீதிமன்றம் எவ்வாறு 50 சதவிகிதம் என்று நிர்ணயித்தது  என்று கேள்விகளும் எழுந்துள்ளன.

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) சேருவதற்காக வருமான உச்ச வரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதுபோல  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அவர்கள் கிரிமீலேயர்களாக கருதப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது.

இது சர்ச்சைகளை எழுப்பி வந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஒரு பிரிவினருக்கு அவர் களின் உயர் பொருளாதார நிலையை காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை மறுப்பது சரி என்றால், உயர்சாதியினரில் ஒரு பிரிவினருக்கு அவர்களின் அடிமட்ட பொருளாதார நிலையை காரணம் காட்டி இட ஒதுக்கீடு வழங்குவது மட்டும் எப்படி தவறாகும்? இது எவ்வகையான சமூகநீதி என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல் எற்கனவே குஜராத் மாநிலத்தில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்தை குஜராத் அரசு கொண்டு வந்து, அதை குஜராத் உயர்நீதி மன்றம் ரத்து செய்திருந்தது.

ஆனால், இட ஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்  அத்வானி  ராஜ்நாத்சிங்  போன்றோர் பா.ஜ.க.வின் தேசியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தனர்.  “இட ஒதுக்கீட்டின் பயன் முன்னேறிய சாதியினரில் ஏழைகளுக்குக் கட்டாயம் கிடைக்க வேண்டும்” என்று  பேசியிருந்தனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய  அமைச்சரவை கூட்டத்தில்   பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவசர சட்டம் கொண்டு வரவும் மத்தியஅரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே உயர்ஜாதியினரின் வாக்குகளை பெறும் நோக்கில் அவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.