டில்லி
மொய்ப்பணம் அளிக்க வசதியாக ரூ.11 மற்றும் ரூ.21 மதிப்பிலான நோட்டுக்கள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதாக செய்தி ஊடகமான ‘தி பிரிண்ட்’ தகவல் அளித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்பு நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என மோடியால் அறிவிக்கப்பட்டது. அதை ஒட்டி புதிதாக அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களில் ரூ.1000க்கு பதில் ரூ.2000 அச்சடிக்கப்ப்ட்டது. அது மட்டுமின்றி ரூ.200 நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அதைத் தவிர வேறு சில மதிப்பிலான நோட்டுக்களும் அச்சடிக்க மோடி அரசு திட்டமிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்துக்கள் தங்கள் குடும்ப விசேஷங்களுக்கு மொய்ப்பணம் அதாவது பரிசுத் தொகை அளிக்கும் போது ஒற்றைப்படை எண்களில் அளிப்பது வழக்கமாகும். அதாவது ரூ.11, 21, 51 என்பதைப் போல ரூ.1 சேர்த்து அளிப்பார்கள். அதற்கு வசதியாக மோடி அரசு ரூ.11 மற்றும் ரூ.21 மதிப்பிலான நோட்டுக்களை அச்சடிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்படுகிறது.
இது குறித்து நிதி அமைச்சகத்துடனும், கணக்கு, தணிக்கை இயக்குனர் ராஜிவ் மெஹ்ரிஷி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுஉடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இந்த ரூ.11 மற்றும் ரூ.21 நோட்டிகளை கணக்கில் வைத்துக் கொள்வது கடினம் எனவும் கூறி உள்ளனர்.
ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வர அரசு அப்போது உத்தேசித்திருந்ததால் இந்த புதிய நோட்டுக்கள் அச்சடிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர்,. “அரசு தரப்பில் வெவ்வேறு மதிப்பிலான நோட்டுக்களை அச்சடிக்க திட்டமிடுவதும், ஒரு சில மதிப்பிலான நோட்டுக்களை திரும்ப பெறுவதாக முடிவு எடுப்பதும் வழக்கமான ஒன்றாகும். பொதுவாக ரூ.1 என்பது தனியாக உபயோகிக்கப்படுவதில்லை. அதனால் இந்த நோட்டுக்கள் அச்சடிப்பு பற்றி ஆலோசனை நடந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
ஏற்கனவே ரூ.10000 நோட்டுக்களை 1938 மற்றும் 1954 ஆம் வருடம் ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது. சமீப காலங்களில் 5 பைசா, 10 பைசா, 20 மற்றும் 25 பைசாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். அப்படி இருக்க மேலும் இரு நோட்டுக்களை அச்சடிப்பது நிர்வாகத்தில் சிரமம் என்பதால் இதை ரிசர்வ் வங்கி ஏற்காமல் இருந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.