மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு கல்வித்துறை அமைச்சர் கூறியது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வினோத் தவ்தே தன் கலந்துரையாடலை வீடியோ பதிவு செய்த மாணவர் மீது ஆத்திரமடைந்தார்.

VinodTawde

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் வினோத் தவ்தே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களிடையே கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, பேசிய அமைச்சர் வினோத் அரசு ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வியை அளித்தால் நாளுக்கு நாள் பண செலவு அதிகரிக்கும் என கூறியுள்ளார். மேலும், ‘நீங்கள் படிக்கவில்லை என்றால் வேலைக்கு செல்ல வேண்டும்’ என பேசுயுள்ளார்.

அப்போது மாணவர் ஒருவர் அமைச்சர் பேசியதை ரெக்கார்ட் செய்துள்ளார். இதனை பார்த்த வினோத் மாணவர் ரெக்கார்ட் செய்த வீடியோவை வாங்கி அழித்ததுடன், அங்கிருந்த போலீசாரை அழைத்து அந்த மாணவரை வெளியேற்ற உத்தரவிட்டார். மேலும், எல்லைகளை மீறி கேள்விகளை எழுப்பும் மாணவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கல்வித்துறை அமைச்சர் மாணவரை கைது செய்ய வேண்டுமென பேசியது அரசியல் களத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யுவ சேனா அமைப்பின் தலைவர் ஆதித்யா தாக்கரே, அமைச்சரின் இந்த பேச்சை டிவீட் செய்து தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட கடினமான கேள்விகளை வினோத் தவிர்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பதிலளித்துள்ள வினோத் தவ்தே, தான் யாரையும் கைது செய்ய உத்தரவிட வில்லை எனவும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.