பிசவளி, உத்திரப் பிரதேசம்
உத்திரப் பிரதேச மாநிலத்தில் மற்றொரு சட்டசபை உறுப்பினர் மீது பாலியல் பலாத்காரப் புகார் தரப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசம் உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் மீது ஒரு பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எழுப்பினார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் உ.பி. முதல்வர் இல்லத்தின் முன் தீக்குளிக்க முயன்று காப்பாற்றப் பட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் தந்தை குல்தீப்பின் சகோதரரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். தற்போது சிபிஐ குல்தீப் சிங்கை கைது செய்து இந்த புகாரை விசாரித்து வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் பிசவளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக குஷ்காரா சாகர் இருக்கிறார். பாஜகவை சேர்ந்த இவர் மீது 19 வயது இளம்பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்துள்ளார். தான் மைனராக இருந்த போது குஷ்காரா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது குறித்து அப்போதே புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார். மேலும் தாம் மேஜர் ஆனவுடன் தனக்கும் குஷ்காராவுக்கும் திருமணம் செய்து வைப்பதாக குஷ்காராவின் தந்தை உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினரான குஷ்காரா இதை மறுத்துள்ளார். அவர், “அந்தப் பெண் எனது வீட்டில் வேலை செய்து வந்தார். அப்போது அவர் இது போல புகாரை அவர் குடும்பத்தினருடன் சேர்ந்து காவல்துறைக்கு அளித்தார். விசாரணையில் அது பொய் என கண்டறியப்பட்டதால் மன்னிப்பு கடிதம் ஒன்றை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அது இன்றும் என்னிடம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.