டில்லி

பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து வாகன எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களினால் மாசு அதிகம் ஆவதால் பலரும் எரிவாயு வாகனங்களுக்கும் மின்சார வாகனங்களுக்கும் மாறி உள்ளனர்.   தலைநகர் டில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் எரிவாயு வாகனங்கள் அதிகம் உள்ளன.   கர்நாடகா தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.  ஆனால் எரிவாயு விலை மாறாமல் இருந்து வந்தது.

டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்திரப் பிரஸ்தா கேஸ் லிமிடட் என்னும் நிறுவனம் வாகன எரிவாயு விற்பனை செய்து வருகிறது.  இந்நிறுவனம் நேற்று வாகன எரிவாயுவின் விலையை உயர்த்தி உள்ளது.  டில்லியில் கிலோவுக்கு ரூ.1.36 ம் மற்றும் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கிலோவுக்கு ரூ.1.55ம் விலை உயர்ந்துள்ளது.

நேற்று முதல் டில்லியில் ஒரு கிலோ வாகன எரிவாயு ரூ.41.97க்கும், சுற்றுப்புற பகுதிகளில் ஒரு கிலோ வாகன எரிவாயு ரூ.48.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.    அதே நேரத்தில் குழாய் மூலம் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை இந்த நிறுவனம் உயர்த்தவில்லை.

இது குறித்து இந்திரப்பிரஸ்தா கேஸ் லிமிடட் நிறுவனம், “அமெரிக்க டாலர் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் மிகவும் உயர்ந்துள்ளதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.    எரிவாயு வாங்குவது அமெரிக்க டாலரின் மூலம் என்பதால் டாலர் மதிப்பில் உண்டாகும் மாறுதல்கள் எரிவாயுவின் விலையில் எதிரொலிக்கிறது.” என அறிவித்துள்ளது.

நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது.   நேற்று பெட்ரோல் லிட்டருக்கு டில்லியில் ரூ.78.27, கொல்கத்தாவில் ரூ.80.91, மும்பையில் ரூ.86.08, மற்றும் சென்னையில் ரூ.81.26 க்கு விற்பனை  ஆனது.