டில்லி
பொது மக்களின் விவரங்களை திருடுவோர் யாரும் இரவோடு இரவாக தப்ப முடியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் முகநூல் உபயோகிப்பாளர்களின் விவரங்களை திருடி உபயோகித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்காக முகநூல் அதிபர் மார்க் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்த முகநூல் விவரங்கள் திருட்டு குறித்து இந்தியா கடந்த மார்ச் மாதம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு நோட்டிஸ் ஒன்றை அனுப்பி உள்ளது அதில் இந்தியர்களின் விவரங்கள் எதையும் திருடி உள்ளதா என விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு எந்த பதிலும் வராத நிலையில் கடந்த மாதம் மீண்டும் இன்னொரு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நடத்தினார். அப்போது அவர், “முகநூலில் உள்ள இந்தியர்களின் விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என முகநூல் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. ஆயினும் அரசு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு இது குறித்து இரு நோட்டிஸ்களை அனுப்பி உள்ளது.
நமது நாட்டைப் பொறுத்த வரை அது போல நிறுவனங்களுக்கு என்றுமே அனுமதி விதித்தது கிடையாது. இந்தியர்கள் யாருடைய விவரங்களையும் திருடி விட்டு யாரும் இரவோடு இரவாக ஓடி விடமுடியாது. அனைத்து விவரங்களும் திருடப்படாத வகையில் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.