டில்லி:
கர்நாடகாவில் பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவதால், அங்கு பாஜ ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் 17ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என தகவல்கள் வந்துள்ள நிலையில், சுப்பிரமணியன் சுவாமி 18ந்தேதி நடைபெறும் என்று கூறி புது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பே, கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, வாக்கு எண்ணிக்கை 15ந்தேதி முடிந்தவுடன், 17ந்தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சி அமைவதை உறுதி செய்துள்ள நிலையில், பதவி ஏற்பு விழாவுக்காக ஸ்டேடியம் பதிவு செய்திருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றி கருதப்படுவதால், பதவி ஏற்பு விழாவை பிரமாண்டமாக கொண்டாட பாஜ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்பட அனைத்து மாநில பாஜக முதல்வர்களும், முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மே 18ந்தேதி எடியூரப்பா பதவி ஏற்பார் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான குழப்பவாதி, சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, மே 18ம் தேதி நண்பர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பார். கர்நாடகாவின் பெரும்பான்மையின் பெரும்பான்மை வாக்குப் பதிவிற்கான எனது முந்தைய கணிப்பு உண்மையானதாகிவிட்டது என்றும் பதிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக கர்நாடக பாஜக தொண்டர்கள் குழப்பமடைந்து உள்ளனர். எடியூரப்பா 17ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்திருந்த நிலையில், சுப்பிரமணியசாமி 18ந்தேதி நடைபெறும் என தெரிவித்திருப்பது பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது பாஜக நிர்வாகிகளிடையும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் பாரதியஜனதா ஆட்சி எப்போது பதவி ஏற்கும் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.