சென்னை
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்துக் கொண்டு விஷால் ஒன்றும் செய்யவில்லை என ராதாரவி, பாரதிராஜா, டி ராஜேந்தர் உள்ளிட்டோர் பேட்டி அளித்துள்ளனர்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் குறித்து இன்று திரையுலகை சேர்ந்த மூத்த தயாரிப்பாளர்களான ராதா ரவி, டி ராஜேந்தர், பாரதிராஜா, ஜே கே ரித்தீஷ். ராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். அதன் முடிவில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்கள்.
பேட்டியில் ராதாரவி உள்ளிட்டோர், “இப்படி ஒரு தயாரிப்பாளர்கள் சங்கம் தேவையா என்பதே எங்களின் கேள்வி. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிகளில் எக்கச்சக்கமான குழறுபடிகள் உள்ளன. அதை களைய தயாரிப்பாளர்கள் சங்கத்தை ஆட்டிப்படைக்கும் தயாரிப்பாளர் தலைவர் முன்வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தமிழர் தான் தலைவராக வர வேண்டும்.
தலைவர் விஷால் தமிழ் ராக்கர்ஸ் பற்றி கண்டுபிடித்ததாக கூறினார். ஆனால் இதுவரை அவர்கள் யார் யார் என தெரிவிக்கவில்லை; அவர் தனது படத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். மற்றவர்கள் படங்களைப் பற்றியும் அவர் கவலைப்பட வேண்டும். அவர் ஓராண்டில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் பதவி விலகுவதாக சொன்னார். ஆனால் அவர் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத் தலைவ்ர் பதவியில் இருந்து வாக்குறுதிகளை நிறைவேற்றாத விஷால் விலக வேண்டும். புதிய தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும். லைகாவுடன் கூட்டு வைத்தது ஏன் என்பதை உடனடியாக விஷால் கூற வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.