டில்லி
உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதி ஜோசப்புக்கு மத்திய அரசு பதவி வழங்க மறுத்தது தொடர்பாக கூட்டம் ஒன்றை கொலிஜியம் நீதிபதிகள் நிகழ்த்தினர்.
உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். இவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு நீதிபதி ஜோசப்பை தேர்ந்தெடுத்தனர். ஆனால் மத்திய அரசு அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி அளிக்க மறுத்து விட்டது. இது நீதிபதிகள் இடையே கடும் சர்ச்சையை உண்டாக்கியது.
கடந்த 2016ஆம் வருடம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைத்தது செல்லாது என மத்திய அரசுக்கு எதிராக ஜோசப் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் பலரும் இதை மனதில் கொண்டு தான் மத்திய அரசு அவருக்கு பதவி வழங்க மறுத்து விட்டதாக பேச ஆரம்பித்தனர். ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேரள நீதிபதிகள் அதிகம் உள்ளதால் அவருக்கு பதவி வழங்கவில்லை என தெரிவித்தது.
அரசின் இந்த முடிவால் கொலிஜியத்தில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து ஒரு சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவர்கள் விவாதித்தனர். அதன் பின் அந்த நீதிபதிகளில் மூவர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்தனர்.
கொலிஜியத்தில் ஒருவரான நீதிபதி செல்லமேஸ்வர் விடுப்பில் உள்ளார். அதனால் நீதிபதிகல் ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மற்றும் மதன் லோகுர் ஆகிய மூவர் தீபக் மிஸ்ராவை நேற்று மாலை சுமார் 4.15 மணிக்கு சந்தித்துள்ளனர். சந்திப்பு பற்றிய விவரங்கள் தெரியவில்லை எனினும் ஜோசப் பதவி அளிப்பு குறித்து மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி அழுத்தம் அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.