சென்னை : சேலத்தில் இயங்கி வந்த செயில் ரெப்ரேக்டரி நிறுவனத்தின் மேக்னசைட் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் இயங்கி வந்த மேக்னசைட் சுரங்கம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டுள்ளது. அதில் பணி புரிந்து வந்த 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், அவர் தெரிவித்துள்ளதாவது:
“தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் இல்லாத நிலையில் பல தொழில்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ரூபாய் 100 கோடி செலவில் நடத்திய பிறகும் எதிர்பார்த்த முதலீடுகளை செய்வதற்கு எந்த தொழில் முனைவோர்களும் முன்வரவில்லை. மேக்னசைட் சுரங்கம் மேலும், ஆனால் தமிழகத்தில் நடைபெற்று வருகிற தொழில்கள் நாளுக்கு நாள் நசிந்து வருகிற அவலநிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அறிவிக்கையால் சேலம் மாவட்டத்திலுள்ள செயில் ரெப்ரேக்டரி நிறுவனத்தின் (Sail Refractory Company Limited, Salem) சுரங்கம் கடந்த 14 மாதங்களாக மூடப்பட்டிருப்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
இந்த நிறுவனம் சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 740 ஹெக்டேர் பரப்பளவுள்ள திறந்தவெளி மேக்னசைட் சுரங்கம் இதன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மூடப்பட்ட சுரங்கங்கள் இச்சுரங்கப் பகுதிகளிலிருந்து வெள்ளைக்கல் எனப்படும் மேக்னசைட் கனிமம் தோண்டியெடுத்து பிரிக்கப்பட்டு இந்நிறுவன தொழிற்சாலையில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்திய உருக்காலைகளுக்கு தேவையான தீக்கற்கள் (Fire Bricks) இதன்மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேக்னசைட் சுரங்கப் பணியில் நேரிடையாக 750 தொழிலாளர்களும், அது தொடர்பான பிற பணிகளில் 500 தொழிலாளர்களும் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். நடுவர் அரசின் அறிவிக்கையால் ஜனவரி 2017 இல் தமிழகத்தில் பலநூறு சுரங்கங்கள் மூடப்பட்டன. அவற்றுள் செயில் ரேப்ரேக்டரி சுரங்கமும் ஒன்றாகும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு இதனால் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வசூலித்து அனுமதியை முறைப்படுத்துவது குறித்து தீர்வு காணுமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தின் நூறு சதவீத மதிப்பை அபராதமாக வசூலிக்க வேண்டுமென்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. தடையில்லா சான்றிதழுக்கு அனுமதி நடுவன் அரசு கடிதத்தின்படி தமிழ்நாடு அரசு சுரங்கம் மற்றும் புவியியல் துறையை இதுகுறித்து அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையொட்டி தடையில்லா சான்றிதழ் வழங்கும்படியும் கோரப்பட்டது. தமிழக அரசு சுரங்கம் மற்றும் புவியியல் துறை சுரங்க உற்பத்தி குறித்த பதிவேடுகளை பரிசீலித்து, சரிபார்த்து, விதிப்படி இழப்பீட்டை செலுத்த அறிவுரை வழங்க வேண்டும். உரிய இழப்பீட்டை நிறுவனம் செலுத்திடும் நிலையில் தடையில்லா சான்றிதழ் வழங்கி, நடுவன் அரசின் சுற்றுச்சூழல் துறை செயில் ரெப்ரேக்டரி நிறுவன மனுவின் மீதான அடுத்த நடவடிக்கைகளை துவங்கிட வழிவகுக்கும். உடனடி நடவடிக்கை தேவை தமிழ்நாடு அரசு தனது தரப்பு பணிகளை விரைவுபடுத்தி தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி, அந்தப் பகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் இதுகுறித்து கடந்த 16 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நமக்கு மிகுந்த வியப்பை தருகிறது. எனவே, தமிழக அரசு இக்கோரிக்கை குறித்து தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து 1500 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.