நாகாவ், அசாம்
ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அசாம் மாநிலத்தில் சாலை பராமரிப்பு சரியாக இல்லை என பேசிய போது அவரை பேச விடாமல் மத்திய அமைச்சர் ஒருவர் தடுத்து மைக்கை பிடுங்கி உள்ளார்.
அசாமில் உள்ள நாகாவ் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய ரெயில்வேத்துறை இணை அமைச்சர் ரஞ்சன் கோஹைன், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், உள்ளூர் பிரமுகர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் பேச அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவில் அரசு அதிகாரிகள் சிலர் பேசிய பின் ஓய்வுபெற்ற ஆசிரியர் பேச அழைக்கப்பட்டார். ஆசிரியர் தனது உரையில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து பேசினார். அவர், “பல வருடங்களாக நாகாவ் மாவட்டம் அமோலபட்டி பகுதியில் உள்ள பி பி சாலை சுரங்கப்பாதை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மட்டும் அரசு கவனிக்கும் என நாங்கள் இன்னும் எதிர்பார்த்தபடி உள்ளோம். இது குறித்து நான் பல மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
உடனே தனது இருக்கையை விட்டு எழுந்த மத்திய அமைச்சர் ரஞ்சன் கோஹன் அந்த ஆசிரியரிடம் இருந்து மைக்கை பிடுங்கிக் கொண்டார். கூட்டத்தினர் இதை பார்த்து அதிர்ந்தனர். அந்த ஆசிரியரிடம், “இது குறித்து நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசினீர்களா? இந்த கூட்டத்தில் குழப்பம் ஏற்படும் எண்ணத்துடன் நீங்கள் வந்துள்ளீர்கள். சரியான முட்டாள் தனமான செய்கை இது” என அமைச்சர் கடிந்துக் கொண்டார்.
அமைச்சருக்கு பதில் சொல்ல வந்த ஆசிரியரிடம் மைக்கை தராத அமைச்சர், “எந்த ஒரு பிரச்சினையும் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதால் தீர்ந்து விடாது. உங்களுக்கு ஏதும் புகார் இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் பேசக் கூடாது.” என அவரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அசாமில் பல பகுதிகளில் மாணவர்கள் சங்கம் அமைச்சரின் கொடும்பாவியை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி உள்ளனர்.