பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு பாஜக, காங்கிரஸ், மதச்சாற்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ‘‘நியூஸ் மினிட்’’ இதழுக்கு கார் பயணத்தின் போது பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘என் மீது பிரதமர் மோடியும், எடியூரப்பாவும் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அதனால் நான் எனது ஆட்சியில் என்ன சாதனைக¬ள் செய்தேன் என்று பொது இடத்தில் விவாதிக்க தயாராகவுள்ளேன்.

அதேபோல் எடியூரப்பாவும் அவர் ஆட்சியில் செய்த சாதனைகளை விவாதிக்கலாம். இந்த விவாதத்தின் போது பிரதமர் மோடி அருகில் இருக்க வேண்டும். இந்த விவாத்தில் கலந்து கொள்ள நான் ஏற்கனவே அழைப்பு விடுத்தேன். ஆனால் இருவரும் இதற்கு முன்வரவில்லை’’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பான விளம்பரம் ஒன்று நாளிதழ்களின் பிரசுரமாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்திலும் சித்தராமையா வெளியிட்டுள்ளார். அதோடு பாஜக.வுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என 5 காரணங்களை எடியூரப்பா கூற வேண்டும் என்றும் பாஜகவிற்கு ஏன் வாக்களிக்க கூடாது என்ற 5 காரணங்களை பதிவிட்டுள்ளார். அதன் விபரம்…

# கர்நாடகாவில் கடந்த 2008-2013 வரையிலான பாஜகவின் ஊழல் நிறைந்த ஆட்சியில் முதல்வரும், 5 அமைச்சர்களும் ஊழல் புகாரில் கைதாகி, சிறை சென்றனர்.

# கடந்த பாஜக ஆட்சியில் 5 வருடங்களுக்குள் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டனர். ஆபரேஷன் கமலா என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை வாங்கி ஓர் நிலையில்லாத ஆட்சி நடைபெற்றது.

# மக்களின் சுதந்திரத்தினை பாஜகவினர் மதித்ததில்லை. பாஜக தனது ஆட்சியில் உடை, உணவு போன்றவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், அனைத்திலும் மேலாக இந்தி திணிப்பில் ஈடுபட்டது.

# பாஜகவினர் நாட்டின் அமைதி குறித்து கவலை கொண்டது இல்லை. பாஜகவினர் ஆட்சிக்கு வந்தால், தெருக்களில் வன்முறை வெடிக்கும்.

# நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரை போடப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். பெண்களுக்கு எதிராகவும், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகவும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.