பெங்களூரு
பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கோபம் அடைந்துள்ளார்.
நேற்று கர்நாடக பத்திரிகையாளர்கள் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை சந்தித்தனர். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
பத்திரிகையாளர்கள் ஜனார்த்தன் ரெட்டியின் சகோதரர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது குறித்தும் பாஜகவுக்காக ஜனாரதன் ரெட்டி தேர்தல் பிரசாரம் செய்வது குறித்தும் கேட்டதற்கு ரெட்டி சகோதரர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதால் போட்டியிட வாய்ப்பு அளித்தததாகவும் ஜனார்த்தன் ரெட்டி தனது நண்பர் ஸ்ரீராமுலுவுக்காக பிரச்சாரம் செய்வதாகவும் பதில் அளித்தார்.
மற்றொரு பத்திரிகையாளர் எடியூரப்பாவுக்கும் அமித் ஷாவுக்கும் இடையில் ஜனார்த்தன் ரெட்டி குறித்து ஏதும் கருத்து வேற்றுமை உண்டா எனவும் ஜனார்த்தன் ரெட்டி பாஜகவில் இருக்கிறாரா எனவும் கேட்டார். அதற்கு எடியூரப்பா, “ஜனார்த்தன் ரெட்டி பாஜகவில் இல்லை. நான் இதுவரை ஜனார்த்தன் ரெட்டியை ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளேன். அதன் பிறகு நான் அவரை சந்திப்பதில் கவனமாக இருக்கிறேன்” என பதில் அளித்தார்.
அதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி எடியூரப்பா கலந்துக் கொண்ட கூட்டத்தில் ஜனார்த்தன் ரெட்டியும் கலந்துக் கொண்டதை ஒரு செய்தியாளர் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஜனார்த்தன் ரெட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமின் விதிப்படி அவர் பெல்லாரி மாவட்டத்தில் நுழையக்கூடாது எனத் தெரிந்தும் அவரை பாஜக எப்படி கூட்டத்துக்கு அழைத்தது என கேள்வியும் எழுப்பப்படது.
இதனால் எடியூரப்பா அமைதி இழந்தார். அவர், “அன்பு நண்பர்களே. எங்களுக்கு எங்கள் தொகுதியில் வெற்றி பெற வேண்டியதும் முக்கியமான ஒன்றே ஆகும். நாங்கள் பெல்லாரியில் பெரும் வெற்றி பெறப்போகிறோம். தேவை அற்ற கேள்விகளை தவிர்க்கவும்” என எரிச்சலுடன் கூறினார்.
செய்தியாளர் ஒருவர் எடியூரப்பாவுக்கும் பாஜக தலைமைக்கும் ஏதும் தகராறு உண்டா எனவும், இல்லை எனில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதது ஏன் எனவும் கேட்டார். இந்தக் கேள்வியினால் மேலும் அமைதி இழந்த எடியூரப்பா, “அது கட்சியின் முடிவு. அவரை இளைஞர் அணி செயலாளர் ஆக்கி இருப்பது உங்களுக்கு தெரியாதா? இதுவும் ஒரு அனாவசியமான கேள்வி” என உரத்த குரலில் கூறினார்.