டில்லி:
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அருண் ஜேட்லிக்கு சமீபத்தில் சிறுநீரக சிகிச்சை நடைபெற்றதால் தொற்று ஏற்படக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ‘‘ஜிஎஸ்டி வரி தாக்கல் முறையை எளிதாக்குவதற்கு அமைச்சரவை குழு அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு மாதத்துக்கு 3 தாக்கல்கள் செய்யப்பட்டு வந்த சூழலில் இனி ஒருமுறை மட்டும் வரிதாக்கல் செய்தால் போதுமானது என கவுன்சில் முடிவெடுத்திருக்கிறது. 6 மாதத்துக்குள் இது நடைமுறைக்கு வரும்’’ என நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குதாரர் அமைப்பினை மாற்றுவதற்கு கவுன்சில் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஜிஎஸ்டி நெட்வொர்க்கை முழுக்கவும் ஒரு அரசுசார் நெட்வொர்க்காக மாற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மற்றும் காசோலையை ஊக்குவிக்கும் விதமாக அந்த வகை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் 2% சலுகை வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை 5 நபர் குழுவுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. அடுத்த கூட்டத்துக்கு முன்பு இந்த குழு தன்னுடைய பரிந்துரையை வழங்கும்.