மைசூரு
கர்நாடகா 2018 தேர்தலில் சுரங்க ஊழலில் சம்பந்தப்பட்ட ரெட்டி சகோதரர்களை அரசியலுக்கு கொண்டு வர அமித் ஷா முடிவெடுத்தார் என எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகா 2018 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பாஜகவை குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. பாஜகவுக்குள் எடியூரப்பாவிடம் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் சுமுக உறவில்லை என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் மைசூருவில் எடியூரப்பா ஒரு செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
எடியூரப்பா அந்த பேட்டியில், “தனியாக பிரசாரம் செய்வது நான் எடுத்த முடிவாகும். அமித் ஷாவும் பிரதமர் மோடியும் இதையே தெரிவித்தனர். நான் கடந்த இரு தினங்களில் நான் ஒவ்வொரு நாளும் பல தொகுதிகளுக்கு செல்கிறேன். தேர்தலுக்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் பிரசாரம் செய்வது அவசியம் என்பதாலேயே தனித்து பிரசாரம் செய்து வருகிறோம்.
கருத்துக் கணிப்புக்கள் சொல்வது பல நேரங்களில் தவறாகவே ஆகி உள்ளது சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் இது போலவே நிகழ்ந்தது. நாங்கள் தனிப் பெரும்பான்மை பெற்று வரும் மே 17ஆம் தேதி நான் முதல்வராக பதவி ஏற்கப்போவது உறுதி. அதே போல நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டி இடுகிறோஒம். எங்களுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் ரகசிய கூட்டு உள்ளதாக சித்தராமையா சொல்வது தவறானது.
கர்நாடக அரசியலுக்குள் ரெட்டி சகோதரர்களை மீண்டும் அழைத்ததில் தவறில்லை. இது அமித்ஷா ஒப்புக் கொண்ட ஒரு முடிவாகும். ஜனார்த்தன ரெட்டிக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் கட்சிக்காக உழைப்பதால் கட்சிக்கு நன்மை என்பதால் அவர்களை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.“ என தெரிவித்துள்ளார்.