டில்லி:
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கும் நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு ஆட்சியை பிடிக்க பாஜக கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பல தலைவர்கள் அங்கு முகாமிட்டு பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படாமல் நிலையாக ஒரே விலையில் உள்ளது. டில்லி பெட்ரோல் நிலையங்களில் கூட இன்று வரை விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.63, டீசல் ஒரு லிட்டர் ரூ.65.93 என்ற நிலையில் இருந்து மாறாமல் உள்ளது.
முன்னதாக கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இந்த நிலை இருந்ததால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் லீவர் ஆகியவற்றின் பங்குகள் 9 முதல் 16 சதவீதம் வரையிலான இழப்பை சந்தித்தன. இவற்றின் பங்கு சந்தை நிலவரத்தை 90 சதவீத சில்லரை விற்பனை தான் கட்டுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடக்கும் கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க வேண்டாம் என்று அரசு தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.