ஜோகனஸ்பர்க்:

ஊழல் வழக்கில் தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தென் ஆப்பிரிக்கா அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா ( வயது 75). 2009-ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்தார். அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. சமீபத்தில் இந்தியரான குப்தா என்பவரது குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஜூமா ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதை இரு தரப்பினரும் மறுத்திருந்தனர்.

ஜூமாவுக்கு ஆளும் கட்சி எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டது, அதிபர் பதவியை ஜூமா ராஜினாமா செய்ய கட்சித் தலைமை வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் ஜூமா பதவி விலகினார்.

இந்நிலையில் ஊழல் வழக்கு விசாரணைக்காக டர்பன் நகர் உயர்நீதிமன்றத்தில் ஜேக்கப் ஜூமா இன்று ஆஜரானார். நீதிமன்றத்தின் வெளியே தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்களை பார்த்து ஜூமா மகிழ்ச்சியுடன் கையை அசைத்தனர். மறு விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.