டில்லி
வங்கிகளில் நடைபெறும் கடன் மோசடிகளால் நேர்மையான பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார்.
டில்லியில் நேற்று பெண்கள் விழா ஒன்று நடந்தது. பெண்கள் வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் சார்பில் நடந்த இந்த ஆண்டுவிழா கூட்டத்தில் ஜனாதிபதி ராம் கோவிந்த் கலந்துக் கொண்டார். நடிகை டிவிங்கிள் கன்னா, தயாரிப்பாளர் ஏக்தா கபூர், டெசி தாமஸ் உள்ளிட்ட 9 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
கூட்டத்தில் அவர், “இந்திய நாட்டில் பெருமளவில் நமது மகள்களும் சகோதரிகளும் பணி புரியும் சூழலை உருவாக்க வேண்டும். பணி புரியும் மகளிரின் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு முழு பாதுகாப்பையும் பணியில் உற்சாகமும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் குடும்ப பொருள்ளாதாரத்தை உயர்த்த மகளிர் பணி புரிவது அவசியம் ஆகி உள்ளது.
இந்த அரசு பெண்கள் தொழில் புரிய வசதியாக 45 ஆயிரம் பேருக்கு தொழில் கடன்கள் வழங்கி உள்ளது. இதில் 39 ஆயிரம் கடன்கள் முழுவதுமாக அடைபட்டு விட்டன. முத்ரா திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் பெண்களுக்காக 11.7 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. அவைகளில் 8.8 கோடி கடன்கள் கடந்த வருட இறுதிக்குள் அடைக்கப் பட்டு விட்டன.
ஆனால் வேறு பல தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துள்ளன. வர்த்தகத்தில் இழப்புகள் வரலாம். அதற்காக வங்கிக் கடனை திருப்பி தராமல் இருந்தால் நேர்மையான பொதுமக்கள் பாதிப்பு அடைகிறார்கள். அப்பாவி இந்தியக் குடும்பங்கள் இழப்பை சந்திக்கின்றனர். அதற்கு முழுப் பொறுப்பும் வங்கிக் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்பவரகளையே சேரும்” என குறிப்பிட்டுள்ளார்