டில்லி

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முகநூலில் 5 கோடி பேரின் விவரங்களை திருடியது குறித்தும் வரும் நாடாளுமன்ற தேர்தலின் அதன் தாக்கம் குறித்தும் விவாதிக்க தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் கூட்டம் வரும் 27ஆம் தேதி கூட உள்ளது.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முகநூலில் உள்ள 5 கோடி பேர் பற்றிய விவரங்களை திருடி அதன் மூலம் ட்ரம்ப் வெற்றி பெற உதவியதாக புகார் எழுந்தது.   இதனால் முகநூலில் விவரங்கள் திருடப்படுவதாகவும், முகநூல் கணக்கை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் பரப்புரை பதியப்பட்டது.   முகநூலில் இருந்து விவரங்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்ட முகநூல் அதிபர் மார்க் அதற்காக மன்னிப்பு கோரி உள்ளார்.

இந்த  கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் இந்திய தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு உதவியதாக பாஜக குற்றம் சாட்டியது.  இதற்காக நடந்து முடிந்த குஜராத் தேர்தலையும், பாராளுமன்ற இடைத் தேர்தலையும் சுட்டிக் காட்டியது.   மேலும் வரும் 2019ஆம் வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இந்த நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.

அதே நேரத்தில்  காங்கிரஸ் கட்சி கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்தே பாஜகவுக்கு இந்த  கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் உதவி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.   கடந்த 2010 ஆம் வருடம் நடந்த பீகார் தேர்தல்களில் இருந்தே இந்த நிறுவனத்தின் உதவியால் தான் பாஜக வெற்றி பெற்றது எனவும்  இந்த நிறுவனத்தின் இந்திய பங்குதாராரான ஓவ்லெனோ பிசினஸ் எக்ஸிக்யூடிவ் இலக்கு +272 எனக் கூறி பாஜகவை 282 இடங்களில் வெற்றி பெற வைத்துள்ளதாக கூறுகிறது.

ஆனால் ஓவ்லெனோ பிசினஸ் எக்ஸிக்யூடிவ் நிறுவனத்தின் இணைய தளம் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்குமே தாங்கள் பணி ஆற்றியதாக கூறி உள்ளது.   தற்போது அந்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளதால் வெளியே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி தேர்தல் ஆணையம் வரும் 27 ஆம் தேதி கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளது.   அப்போது தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் நடந்துள்ள தேர்தல்களின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் செயல்பாடுகல் குறித்தும் விவாதிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.