பாகுபலி படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிய நடிகர் சத்யராஜூக்கு தற்போது சர்வேதச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவரது உருவம் லண்டனில் மெழுகு சிலையாக வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் , “பாகுபலி”.
இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வசூலிலிலும் புது சாதனை படைத்தது.
உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படத்தில், ராஜ விசுவாசியாக கட்டப்பா எனும் பாத்திரத்தில் நடித்தார் சத்யராஜ்.
வழக்கம்போல சிறப்பாக நடித்திருந்த சத்யராஜூக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது.
“கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன்?” என்று விளம்பரப்படுத்தும் அளவுக்கு அந்தக் கதாப்பாத்திரம் புகழ் பெற்றுவிட்டது.
இந்நிலையில் சத்யராஜூக்கு மற்றொரு பெருமை கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள Madame Tussauds மியூசியத்தில், கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜூக்கு மெழுகில் சிலை வைத்திருக்கிறார்கள்.
இதுவரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்தக் கெளரவம் முதன்முறையாக ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.