சென்னை:
டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 -இல் இங்கிலாந்து நாட்டின் பார்க்லே வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கை உடனே விசாரரித்து தீர்ப்பு என வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நிதி மன்றம், டிடிவி மீதான வழக்கு 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூறியது.
அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால், அமலாக்கத்துறை மற்றும் டிடிவி தரப்பினர் மாறி மாறி வாய்தா கேட்டதால் வழக்கின் விசாரணை நீண்டுகொண்டே சென்றது.
இந்நிலையில், தினகரன் மீதான அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம், மேலும் 3 மாதம் எழும்பூர் நீதிமன்றத்துக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.