சென்னை:
பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளதை தொடர்ந்து, அங்குள்ள லெனின் சிலைகள் உடைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாரதியஜனதா தேசிய செயலாளரான எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில், லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமியின் சிலை என்று பதிவிட்டுள்ளார்.
இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில, இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், தந்தை பெரியார் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதி கூட யாருக்கும் கிடையாது என்றவர், எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் அடிக்கடி பேசுகிறார், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக என்னுடன் ஓபிஎஸ் நேற்று தன்னுடன் பேசியதாகவும், அப்போது, மார்ச் 9-ம் தேதி மத்திய அரசின் கூட்டத்திற்கு பிறகு பேரவையை கூட்டலாமா என்றார். ஆனால், நான், அது காலத்தை நீட்டிக்கும் செயல் என்பதால் முன்கூட்டியே சட்டசபையை கூட்ட வேண்டும் என்றேன் என்று கூறினார்.
ரஜினியின் வெற்றிடம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது கூறி, தமிழக்ததில் கலகத்தை உருவாக்கி வரும் எச்.ராஜாவை ஸ்டாலின் கூறியதுபோல குண்டாசில் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.