நெல்லை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

அய்யாக்கண்ணு நெல்லையில் நேற்று செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது அவர், “மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் மாநிலம் முழுவதும் தடை செய்யக்கோரி குமரி முதல் கோட்டை வரையிலான பேரணி நடந்து வருகிறது. விரைவில் சென்னையை அடைந்ததும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க இருக்கிறோம்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”  என்று அவர் தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்க நினைக்கிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக விவசாயிகள் டில்லியில் பிரதமர் வீட்டு முன்பு போராடுவோம் என்று அய்யாக்கண்ணு  தெரிவித்தார்.